KG Sami1937 — 2006

இறைவன் அன்னமயம்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து

வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

இறைநிலை, உயிர் நிலை, மனநிலை, உடல்நிலை இவற்றைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்துதான் வாழணும். அவ்வாறு தெரிந்து வாழும் வாழ்க்கை என்றும் இனியதாகவே இருக்கும். நாம உடல்நிலையை ஓAC௧~ தெரிந்திருக்கிறோம். ஆனால் மனநிலையைப் பற்றி தெரிந்து வாழ்வதில்லை. அந்த சிந்தனையில மனதுக்கும் நாம

ஒரு மேம்பாடு கொடுத்தாகணும். உயிர் என்பது உடலிலே எங்கேயிருக்கிறது, எப்படியிருக்கிறது என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. ஆனாலும் உயிர் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதனால், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்க்கை என்பது

நடைபெறுகிறது. இல்லைனா, தூக்கிக்கிட்டு போயிருவாங்க.

அன்பர்களே! இறைநிலை, உயிர் நிலை, மனநிலை, உடல்நிலை இந்த நான்கைப்பற்றியும் மனிதர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உணவு முதலியன எடுத்துக்கொள்கிறோம். சந்தோசமா இருக்கிறோம் அல்லது சந்தோசமா இருக்க முயற்சி பண்றோம். சந்தோசமா இருக்கக்கூடிய முயற்சியில தோல்வியுறுகிறோம், துன்பப்படுகிறோம். ஆனால், இதெல்லாம் ஏன் எதற்கு என்று சிந்தித்தவர்களில்லை.

அமெரிக்காவுல மகரிஷிக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடுத்தாங்களாம். மகரிஷி சாப்பிட்டார். சாப்பிட்டவுடனே நல்லாயிருக்குதா சாமி, அப்படீன்னாங்களாம். கடல் தண்ணி நல்லாதான் இருக்கும்னாராம். லேசா உப்பு கரிக்குது அதனால கடல் தண்ணின்னு நெனச்சுட்டாருன்னு நெனைச்சாங்களாம். இல்ல சாமி இது இளநீர்ன்னாங்களாம். அமெரிக்காவுல இளநீர் கெடைக்கிறது அருமை. இல்ல, இல்ல இது கடல் தண்ணின்னாராம். கடல்ல இருந்துதான், தண்ணி மேகமாகி, மழையாகி, ஓடையாகி, ஆறாகி, பூமி நிலத்தடி நீராகி, தென்னமரத்து வேர்ல ஏறி, தென்னை மரம் முழுக்க ஏறி, பாளையில ஏறி, குறும்பையில ஏறி, காய்ல ஏறி உள்ள போய் தேங்கியிருக்குது. எது..? கடல் தண்ணீர். அப்படி எல்லாவற்றிலும் நிதர்சனமான உண்மையைப் பார்க்க வேண்டும்.

இன்னிக்கு நாம காலையில சாப்பிட்டோம். என்ன சாப்பிட்டோம்? மண்ண சாப்பிட்டோம். ஆமா... வெள்ளை களிமண்ணு. அய்யையோ அது இட்லிங்க. இல்ல மண்ணு. இட்லி எதுல செய்யுறாங்க? அரிசியிலயிருந்து. அரிசி எதுலயிருந்து வந்தது?

நெல்லுல இருந்து வந்தது, நெல்லு எங்கிருந்து வந்தது? களத்துமேட்டுலயிருந்து. களத்து மேட்டுக்கு எங்கிருந்து வந்தது? வயல்லயிருந்து. வயல்ல எந்த இடத்தில இருந்து வந்தது? மண்ணுல இருந்து. ஆக இட்லி எதுலயிருந்து வந்தது? மண்ணுலேருந்து. இட்லியா இருந்தாலும், தோசையா இருந்தாலும், இடியாப்பம், ஆப்பமா இருந்தாலும், புட்டாக இருந்தாலும் எங்கிருந்து வந்தது? மண்ணுலேருந்து. வடையா இருந்தாலும், பொங்கலா இருந்தாலும், பிரியாணியா இருந்தாலும் எல்லாம் மண்ணுதான். சட்டை போட்டிருக்கோமே! அதுவும் மண்ணுதான். அது எங்கிருந்து வந்தது? மண்ணத்தான் எடுத்து, நூல் நூத்து... மண்ணுன்னா அது செடியாகி, அந்தச் செடியில காயாகி வெடிச்சு வருமே அதுதான்.

அன்பர்களே! நாமெல்லாம் தவம் செய்யறோம். ஆனாலும் இந்த உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டாமா? நீ மண்ணா போவோ அப்படீன்னு யாராவது கோபம் வந்திட்டா சாபம் கொடுப்பாங்க. அவங்கென்ன சொல்றது, எல்லாரும் மண்ணாத்தான் போவோம். இப்பவோ அல்லது பின்னாலோ மண்ணாப் போக வேண்டியதுதான் எல்லாரும். இல்ல நீராகவா, நெருப்பாகவா, காற்றாகவா, ஆகாசமாகவா போவாங்க, அல்லது தெய்வமாகவா போவாங்க? எல்லாத்தையும் பொதச்சா மண்ணுதான். சுட்டா? சுட்ட மிச்சம் கெடைக்குது பாருங்க அது மண்ணு. எலும்பு, சதை, ரத்தம், நரம்பெல்லாம் எரிஞ்சு காத்துல போயிடுது. மழை பேய்ஞ்சா கரைஞ்சு மண்ணுக்கு வந்திடுது. காத்துல போறதுனா வானமண்டலத்துக்கு போறதில்ல. மழை பேய்ஞ்சா நம்ம தலையிலதான் கொட்டும்.

அன்பர்களே! இதில இன்னொரு விசயத்த நினைச்சு பாருங்க. நாம சாப்பிட்ட சாப்பாட்டுல அதாவது மண்ணுல பாதி நாளைக்கு மண்ணாப் போயிடும். மீதிய அப்படியே collect பண்ணிட்டே வருவோம். கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமா அப்படியே சேர்த்து வச்சுக்கிட்டே... ஒரு நாளைக்கு மண்ணாப் போப்போவுது. இப்படி இதுவரைக்கும் எத்தனை பேரு daily மண்ணானவங்க? அந்த மண்ணெல்லாம் என்னாச்சு? அதத்தான் நாம திங்கறோம். புத்தம் புது மண்ணுல வந்து நெல் வெளஞ்சு நாம சாப்பிடறமா? எத்தனையோ பேரு தின்ன மண்ணுன்னு வெச்சுக்கோங்களேன். அதைத்தான் நாம திங்கறோம். திருப்பி திருப்பி தின்னுகிட்டே இருக்கிறோம். புதுசா புதுசா இவங்கதான் தின்னுட்டாங்களேன்னு ஏதோ சந்திர மண்டலத்திலிருந்து இறக்குமதி ஆகல மண்ணு. பழைய மண்ணு, ஆச்சா..! இன்னொரு வெளக்கம் கொடுக்கலாம் இதுக்கு. நாம ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மண்ணு தின்போம்? என்னை எடுத்துக்கோங்க, எனக்கு 64 வயசு ஆச்சு. ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணு திங்கமாட்டேன்? மண்ணு கனமா இருக்கும். அதனால சொல்றேன். இல்ல 1 கிலோன்னு வெச்சுக்கங்க. ஒரு நாளைக்கு 1 கிலோ, 1 மாதத்திற்கு 30 கிலோ, 1 வருசத்துக்கு 360 கிலோ. பத்து வருசத்துக்கு 3600 கிலோ. 3.5 டன்னு. 60 வருசத்துக்கு 20 டன்னு. டன்னுன்னா தெரியுமா? 1000 கிலோ. ஆக 20 டன் மண்ணு தின்னுருக்கிறேன் நான். இந்த 60 வருசத்துல நான் பொறக்கறதுக்கு முன்னால இருந்த உலகத்துக்கு இப்ப இருக்கிற உலகத்தை நிறுத்து பார்த்தீங்கன்னா 60 கிலோ கொறையும். எங்கே போச்சு? நான் தின்னுட்டனே. நம்ம நாட்டில 100 கோடி பேரு வாழுறாங்களாம். அவங்க தின்னதையும் சேருங்க. ஒரு நூறு வருஷத்துக்கு அப்பறம் மனுசன் தோன்றினதுல இருந்து ஒரு கோடி வருஷத்தச் சேருங்க. சீவராசியெல்லாம் அதது திங்கிற மண்ணு எல்லாத்தயும் சேருங்க. அது சீவராசி தோன்றுவதற்கு முன்னால மண்ணு எத்தனை டன்னு இருந்ததுன்னு பார்த்துக்கங்க. இப்ப நிறுத்துப் பார்த்தா எவ்வளவு கொறையும்? பூமியே இருக்காது. எல்லாரும் சேர்ந்து அப்பப்ப மண்ண தின்னுத்தின்னு... மண்ணு குறைஞ்சு, கரைஞ்சு, அந்த மாதிரி இந்த சீவராசிகள் தோன்றியதிலிருந்து தின்ற மண்ண, கணக்குப் பார்த்தா இந்த பூமியே காணாமல் போயிருக்கும். இது என்ன அதிசயம். தின்னமா? திங்கலியா? தின்னம்னா குறைஞ்சிருக்குமே? அப்படியே இருக்குதே! அப்படி என்னதான் தின்னோம்? உண்மை என்னன்னா, எந்த ஒரு பொருளிலும் காந்தத் தன்மை இருக்கிறது.

காந்தத் தத்துவம் தெரிஞ்சவங்களுக்கு இது தெரியும். காந்தத்ததான் நாம பயன்படுத்தறோம். எல்லாப் பொருளிலும் காந்தத் தன்மையும், பருப்பொருள் தன்மையும், அலைத்தன்மையும் இருக்கிறது. உதாரணமாக ஒரு மெழுகுவர்த்தி எரியுதுன்னு வெச்சுக்கோங்க. எரிந்தா.., மெழுகுவர்த்தி குண்டா இருக்கு, கனமா இருக்கு. எரிகிறது. எரிகிறது என்றால் மெழுகுவர்த்தி வெளிச்சமாகவும் சூடாகவும் மாறிக் கொண்டேயிருக்குது. வெளிச்சமும், சூடும் stuff இல்ல, பண்டமில்ல. மெழுகுவர்த்தி பண்டம். அதிலிருந்து வரக்கூடிய சூடு.. அது பண்டமில்ல. விறகு எரிக்கறாங்க. Gas எரிச்சாலும் அதுவொரு தினுசான விறகுதான்னு வெச்சுக்கோங்க. அந்த பொருள் அழிந்து போவதில்லை. கார்பனும், ஹைட்ரஜனும் இருக்குது உங்க Gas சிலிண்டர்ல. ஒரு கார்பன் அணு, 4 ஹைட்ரஜன் அணு சேர்ந்ததுதான் மீத்தேன் என்ற Gas - CH4. அத விஞ்ஞானிகள் நெருக்கி நீர்மமாக்கி சிலிண்டர்ல  கொடுத்தர்றாங்க. அத நாம எரிக்கிறோம். கொஞ்சம் வெளிச்சம் வருது அத நாம பயன்படுத்துறது இல்ல. அதிகமா சூடு வருது. சோறாக்கிக்கிறோம். அதிலிருந்து C என்ற கார்பன் H என்ற ஹைட்ரஜன் காற்றில் உள்ள ஆக்ஸிஜனோட சேர்ந்து வேறு இரண்டு பொருளாக மாறுது. ஒண்ணு கார்பன்-டை- ஆக்ஸைடு. இன்னொண்ணு நீராவி. Gas எரிந்து கரியமில வாயுவாகவும், நீராவியாகவும் மாறுகிறது. பழைய Gas-ஸ நிறுத்துக்கோங்க. புதுசா உருவாகியிருக்கிற கரியமிலவாயுவையும், நீராவியையும் நிறுத்தால் சமமா இருக்கும். கொஞ்சம் கூட கொறையாது. ஒரு வேதி வினை நிகழ்ந்து ஒரே ஒரு பொருளோ, ரெண்டு பொருளோ மாறி வேறு ஒரு பொருளாகவோ, ரெண்டு பொருளாகவோ மாறினால் முன்னிருந்த பொருளின் எடையும் புதிதாக வந்த பொருளின் எடையும் சரியாக இருக்கும். அதுக்கு அவுங்க ஒரு formula சொல்வாங்க. Nothing is lost, Nothing is created. எதுவும் இழந்துவிடப்படுவதில்லை, எதுவும் புதிதாக பெறப்படுவதும் இல்லை. Only there are changes. Interconvertibility. ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுமே தவிர, அந்த மாற்றத்தில எதுவும் குறைந்து போகாது, எதுவும் கூடிப் போகாது. சிலிண்டர்ல இருந்த Gas-ஸ கரியமிலவாயுவாகவும், நீராவியாகவும் மாத்திட்டீங்க. சிலிண்டர்ல Gas எவ்வளவு எடை குறைஞ்சுதோ அந்த எடை இப்ப நீங்க உற்பத்தி பண்ணின கரியமிலவாயுவிலயும், நீராவியிலயும் இருக்கும். நீங்க புடிச்சு நிறுத்துப் பாருங்க. விஞ்ஞானிகள் சொல்றாங்கன்னு ஒத்துக்க வேண்டாம். அது சரி, சமையல் எப்படி நடந்தது? எதுவும் இழக்கப்படவில்லை, எதுவும் பெறப்படவில்லை என்றால் சமையல் எப்படி நடந்தது? இப்படி ஆராய்ச்சி பண்ணி பார்த்தீங்கன்னா அநேக விசயம் ஆச்சரியமா இருக்கும். அதுதான் காந்தத்தினுடைய மகிமை. பொருளுக்கு இழப்பு இல்லாமல் காந்தமே எல்லா வேலையும் பண்ணிக் கொடுக்குது.

அன்பர்களே! உண்மை, உண்மைதான். இதையெல்லாம் தெரிந்துகொள்ளும்போது மனதிலே இருக்குது பாருங்க ஒரு tightness, அறிவில.. மூளையில.. அந்த tightness நீங்கி relax- ஆக இருக்கும். மூளை இயக்கத்திற்கு வரும். இறுகி உறைந்து போனது மாதிரி இருந்த மூளை இப்படிப்பட்ட நுணுக்கமான விசயத்தைப் பத்தி சிந்திக்கும் பொழுது அந்த இறுக்கம் தளர்ந்து, இளகிய மூளையாகும். செயல்பாட்டுக்கு வரும். ஏரியா அதிகமா கேக்கும். அதனால இந்த ஆராய்ச்சியும், தவமும் செய்யறவங்களுக்கு மண்டை ஓI விசாலமாக வளரும். உட்பொருள் வளர ஆரம்பிக்கும். நாம் நல்ல அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். விசாலமான அறிவு, நுணுக்கமான அறிவைப் பெற்றுக்கொள்ளலாம். இனாமா, எங்கேயும் போயி காசு கொடுத்தெல்லாம் வாங்கறதில்லை. எது அறிவாக மாறுகிறது என்றால் எது நமக்கு அனுபோகமாக ஆச்சோ, எது பசி தீர்த்ததோ, எதைச் சாப்பிட்டோமோ, எதைக் கொண்டு உடம்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோமோ அதுவே அறிவாகவும் இருக்கிறது. ஆகவே அறிவு என்பது எடுக்க, எடுக்க குறையாமல் வரக்கூடிய ஒரு பெருநிதி. அந்த அறிவைப் பெற்றிருக்கக்கூடிய நாம் எதுக்கும் கவலைப்படத் தேவையில்லை என்பதெல்லாம் வரும்.

அன்பர்களே! இவ்வளவு பெரிய ஆராய்ச்சிய நாம பண்ணினாலும்  நமது அறிவு இந்த உடம்பிலிருந்துதான் செயல்படணும். இந்த உடம்பு பஞ்ச பூதங்களாலானது. ஒவ்வொரு பூதமும் ஒவ்வொரு வகையான காந்தத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும். இதுக்கு தன்மாத்திரையின்னு பேரு. சுழலலை என்ற விண் முதல் பூதம். அதிலிருந்து வரக்கூடிய காந்தம் அழுத்தமாக உணரப்படும். சப்தமாக உணரப்படக்கூடியது காற்று. காற்றிலுள்ள அணுக்கள் எண்ணிக்கையில கூடினா தீ. அதிலிருந்து வரக்கூடிய காந்தம் வெளிச்சமாக உணரப்படும். இப்படி ஐந்து பூதங்களும் ஐந்து விதமான காந்தத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. இதனையே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்று சொல்றோம். நமது உடம்பில ஐந்து பூதங்களும் இருக்கிறதுனால ஐந்து தன்மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஐந்து தன்மாத்திரைகளும் அண்டவெளியில இருக்குது பாருங்க பூதங்கள், அவற்றிலிருந்து வரக்கூடிய தன்மாத்திரைகள் மாதிரிதான். ஆனா அண்டவெளியில இருக்கக்கூடிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்பவை எதையும் அறியாது. தங்களையும் அறியாது. சீவனில்லை. ஆனால் மனிதனிடத்திலிருந்து வரக்கூடிய காந்த தன்மாத்திரைகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் தன்னையும் உணரும், வெளியில உள்ள காந்தத்தையும் உணரும். இங்கேதான் அத்தகு ஆற்றல் பெற்ற காந்தத்தை அறிவு என்று சொல்றோம். சத்தத்தைக் காந்தம்னுதானே சொல்றோம்? காந்தம்தானே சப்தமாகுது? வெளிச்சத்தைக் காந்தம்னுதானே சொல்றோம்? நெருப்பில் இருந்து வரக்கூடிய காந்தம்தான் வெளிச்சம். மனித உடம்பிலிருந்து வரக்கூடிய காந்தம் அறிவு. மனம்ன்னும் சொல்லலாம், அறிவுன்னும் சொல்லலாம். இந்த அறிவு கொறையாது. ஏன்? இறைவனே சுத்தவெளியாக, அறிவாக மலர்ந்து கொண்டிருக்கிறான். பூதங்கள்ல கொறைவில்லாமல் தன்மாத்திரை வருகிறது. பூதம் கொறைந்து போகாது. இறைவனோ வற்றா இருப்பு. ஆகவே அறிவும் வற்றாயிருப்பு. இத்தகு ஒரு பெரிய அரிய விசயத்தை தன்னிடத்தில பெற்றிருக்கூடிய மனிதன் ரொம்ப சிறந்த மனிதன்.

பாவம் மனிதன்! அவன் சாப்பாடு இல்லைன்னா வாடிப்போவான். மனிதனுக்கு சாப்பாடு இல்லைனா என்ன ஆவான்? சாப்பாட்டுலயும் ஒரு அர்த்தம் இருக்குது. சா+பாடு = சாப்பாடு. சா என்றால் செத்துப் போ அப்படீன்னு அர்த்தம். சாப்பாடு என்பது செத்துப்போறதுக்குரிய நல்ல ஏற்பாடு. ஏன்னா சாப்பிட்டுட்டே இருந்தா செத்திருலாம். எழுந்திருக்காமலே செத்திருலாம்.. நீங்க பாட்டுக்கு சாப்பிடுங்க அல்லது கொஞ்சம் வெஷம் சாப்பிடுங்க செத்திருலாம். சாப்பிடாம மனுசனால இருக்க முடியாது. எத்தினி நாளைக்கு இருக்கலாம்? மூணு நாள் இருக்கலாம். ஏதோ கொஞ்சம் தண்ணிகிண்ணி குடிச்சுகிட்டு ஒரு வாரம், பத்து நாளு படுத்துக்கலாம். முப்பது நாளு, நாப்பது நாளுல தூக்கிட்டு போயிருவாங்க. சாப்பாடு இல்லைனா மனிதனால வாழ முடியாது. மனிதன்னா என்ன? மனிதன்ல ஐந்து பூதங்கள் இருக்குது. ஐந்து பூதத்துக்கு மூலம் ஆகாசம். ஆகாசத்துக்கு மூலம் தெய்வம். அப்ப மனிதன்னா என்ன? தெய்வமேதான்.

அன்பர்களே! இந்த விசயத்தை சுலபமா தெரிந்துகொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய வஸ்துதானே மனிதன். இந்த பிரபஞ்சத்தில் எத்தனை வஸ்துக்கள் உண்டோ, அத்தனையும் மனிதனிடத்தில் இருக்கின்றனவே! பிரபஞ்சத்தில் எத்தனை விதமான பொருள்கள் இருக்கின்றன? விண், காற்று, நெருப்பு, நீர், மண் என்ற ஐந்து பொருள்கள் இருக்கின்றன. அதே ஐந்து பொருட்கள் மனிதனிடத்திலேயும் இருக்கின்றது. அதனால அவன் உழைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த ஐந்து பொருட்களும் கொறைஞ்சிடும். அதை ஈடு செய்வதற்காக அதே ஐந்து பொருட்களை எடுத்து தன்னிடத்தில சேர்த்துக் கொள்கிறான். உள்ளையோ, வெளியையோ நீங்க தங்க நகை போட்டுகிட்டாலும், பட்டு வேட்டி கட்டிக்கிட்டாலும், சீப்பு போட்டு தல வாரினாலும், பிளேடு எடுத்து ஷேவ் பண்ணிக்கிட்டாலும் எல்லாம் இந்த பஞ்சபூதத்துக்குள்ளதான். பஞ்சபூதத்தின் துணைகொண்டு வாழக்கூடிய பஞ்சபூதம். நமக்குள்ளேயும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. ஆகவே பஞ்சபூதத்தை விழுங்கி விழுங்கி.. சாப்பிட்டு சாப்பிட்டு.., இந்த மாதிரி சாப்பிடாம வாழவே முடியாது. இறைவன் பல்வேறுகட்ட பரிணாமத்திற்கு பின் மனிதனாக இருக்கிறான். மனிதனாக யார் இருக்கிறான்? எவன் மனிதனாக இருக்கிறான்? மனிதனுக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு பெரிய மகத்துவமான பொருள் எது? தெய்வம். ம்ம்.. தெய்வந்தான் மனிதனாக இருக்கிறது. நாம்..? தெய்வமே நாமாக இருக்கிறது. தெய்வம் ரொம்ப வலிமையானது. வேண்டுதல் வேண்டாமை இலாதது. அதுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டியதில்லை. வேண்டாமையும் கெடையாது. வேண்டுதலும் அதுக்கு கெடையாது. அதுபாட்டுக்கு இருக்கும். தேவையே அதுக்கு கெடையாது. ஏனென்றால் அது அரூபம். தேவையிருந்தா கொடுத்தவனை வாழ்த்தும்,

கொடுக்காதவனைத் திட்டும். அவ்வாறு வேண்டுதல் வேண்டாமை இலாத நிலையில இருக்கக்கூடிய தெய்வம் நாமாக இருக்கும் போது சாப்பாடு வேணும். மனிதனாக இருக்கும்போது சாப்பாடு வேணும். பசிச்சதுன்னா யாருக்குப் பசிக்கும்? யாருக்கு பசிச்சா இறைவனுக்கு பசிக்கும்..? யாருக்கு பசிச்சாலும் இறைவனுக்கு பசிக்கும். யாருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டா நாம நமக்கு சாப்பாடு போட்டுட்ட மாதிரி கணக்கு. அதனால, அடடே நம்ம பசிய போக்கிட்டான் என்று, இறைவன் நமக்கு கொடுக்க கடமைப்பட்டவன். யாருக்கு..? யாருக்காவது கொடுக்கிறவங்களுக்கு கொடுக்க இறைவன் கடமைப்பட்டவன். அத எப்படி சொன்னாங்கன்னா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்று சொன்னாங்க. பிறருக்கு கொடுப்பதுன்னாலே இறைவனுக்கு கொடுப்பதாக அர்த்தம்.

படமாடக் கோயில் பரமர்க் கொன்றீயில் படம்னா அழகுன்னு அர்த்தம். மாடங்களெல்லாம் உள்ள அழகிய கோயில்ல இருக்கக்கூடிய இறைவனுக்கு, அதாவது சாமிக்கு ஒண்ணு கொடுத்தா நடமாடக் கோயில் நம்பர்க்கு அது ஆகாது. இந்த நடமாடிக்கிட்டிருக்கிறான்.. பாருங்க, ஆலயமே உடம்பாக தெருவிலே போயிட்டிருக்கானே, அவனுக்கு போய்ச் சேராது. அங்கே கொடுத்தா இவனுக்கு வீதியில போய்ச் சேராது. வீதியில போற ஆசாமிக்கு கொடுத்தா இறைவனுக்குப் பசி போயிடும். இறைவனுக்கு பசி போகணும்ன்னா எல்லாருக்கும் பசி போகணும். இப்படி சிக்கல் முக்கல் அற்ற கணக்கு ஒண்ணு இருக்குது. ஆகவே ஐயம் இட்டு உண் என்று சொன்னார்கள். ஐயம்ன்னா பிச்சை. பிச்சை போட்டுட்டு சாப்பிடு. கேளுங்க.., அந்த காலத்துல பிச்சைக்காரங்க நிறைய இருப்பாங்க. இப்ப வர்றதுல்ல. ஏதோ பஸ்டேண்டுல ஒருத்தர் ரெண்டு பேர் ரூபா காசு கேக்கிறாங்களே தவிர வீட்டு வாசல்ல வந்து அம்மா, தாயே பிச்சை போடுங்கன்னு நிக்கறதில்லை. அந்த காலத்தில வீட்டு வாசல்ல நின்னு அம்மா, தாயே, அன்னபூரணின்னு ஒவ்வொருத்தர் ஒரு வாசகம் வெச்சுருப்பாங்க. சில வீட்டுல போயி பிச்சை கேட்டா நாங்க இன்னும் சாப்பிடலீங்க ஐயா அப்படீம்பாங்க... அப்படீன்னா என்ன அர்த்தம்? அவங்க சாப்பிட்ட அப்புறமாத்தான் போடுவாங்க. ஒரு சில வீட்டுல சொல்வாங்க நாங்க சாப்பிட்டாச்சுன்னு. அப்ப யாரு வீட்ல போய்க் கேட்பாரு? அதனால அப்படியில்ல ஐயம் இட்டு உண். பிச்சைய போட்டுட்டு மிச்சத்தை சாப்பிடு. அவ்வாறு முற்காலத்தில பிறருக்கு கொடுப்பதை பிரதானமாக வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வாங்கித் தின்னக் கூடிய நிலையில சில பேர் அந்த காலத்துல இருந்தாங்க.

“பெண்டு பிள்ளை இல்லாதவன்

பிழைக்க வழி காணாதோன்

சண்டையினால் வீட்டை விட்டோன்

ஞானத் தங்கமே பண்டாரமானானடி.”

ஏதோ பிச்சைக்காரன் ஆயிட்டான், அவனுக்கும் பசிக்கும். அவன் பிச்சைக்காரனா இருக்கிறது தப்புதான். யாரவன பிச்சைகாரனா போச்சொன்னா? அவனுக்கு வாழறதுக்கு வக்கில்லை.., தெரியலை. தெரியுதோ, தெரியலையோ, தப்பு அவனுதோ, சமுதாயத்தினுடையதோ, ஆனால் பசிக்குது. பசி என்னவாயிருக்கும்? இது வள்ளலாருக்குத்தான் தெரியும், பசி என்னவாயிருக்கும்ன்னு. யாருக்காச்சும் பசி என்னவாயிருக்கும்ன்னு தெரியுமா? சின்னப் பசங்களா இருக்கும்போது சாப்பாட்டுக்கு இல்லாம பள்ளிக்கூடத்துக்கு போனதுண்டா? அவங்களுக்குத்தான் தெரியும் பசி என்னவாயிருக்கும்ன்னு.

எப்பவாச்சும் ரயில்ல போகும்போது, பஸ்சில போகும்போது ஒரு வேள சாப்பாடு இல்லாம போறோமே, அது பசியில்லை. பணம் இருக்கும் இறங்கி சாப்பிடலாங்கிற தைரியம் இருக்கும். பணமும் இல்லாம, பிச்சை எடுக்கவும் மனசில்லாம, சம்பாதிக்கவும் வழியில்லாம, சாப்பாட்டுக்கு இல்லாம பசியா இருக்கிறவனுக்குத்தான் அந்த பசியோட கொடுமை தெரியும். வள்ளலார் அந்த நிலையில இருந்தவரு. பல நாள் பட்டினியாக இருந்தவர். மனிதனுக்கு பசித்தால் மனிதன் துடிப்பான். ஆகவே இறைவனுக்கு போடுவதாக நினைத்து மனிதனுக்கு போடுங்கள்.

நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்

படமாடக் கோயில் பரமர்க்கும் அதுஆமே.

ஆகவே சோறு முக்கியம், சாப்பாடு முக்கியம். சாப்பாடுல இருக்கக்கூடிய பிரச்சனைதான் திருட்டாக மாறுகிறது. இந்த சினிமாவிலயெல்லாம் காட்டுவாங்களே, சின்னப் பையன் அனாதையா போயிடுவான். தங்கச்சி ஒண்ணு பக்கத்தில இருக்கும். ரெண்டு பேரும் பசியோட அலைவாங்க. தங்கச்சி பொண்ணு பசியால ரொம்ப அழும். இரு வர்ரேன்னு பக்கத்துல ஹோட்டல்ல போயி ஒரு இட்லிய தூக்கிட்டு ஓIA!ன். இனிமே கத வேணாம். ஏன் இட்லிய திருடுனான்..? பசி. அந்த காலத்தில ஒரு சினிமா பாட்டா சொன்னாங்க. ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா. அது எந்த கலாட்டாவா இருந்தாலும் சரி. போர், பறி, பிணக்கு, பொறாமை, போட்டி, வஞ்சம்.., எதுவாயிருந்தாலும் நாளையிலேருந்து கெடையாது. இறைவன் இன்னிக்கு ராத்திரி ஒரு வரம் கொடுத்திர்றான், நாளையிலேருந்து பசி கெடையாதுன்னு. காலையில எந்திரிக்க மாட்டோமே! வேலைக்கெல்லாம் போமாட்டோமே! அதான் பசியே இல்ல. எதுக்கு சம்பாதிக்கணும்? எதுக்கு திருடணும்? எதுக்கு பொய் சொல்லணும்? எதுக்கு ஏமாத்தணும்? ஒண்ணுமே.. தேவையில்ல. அப்படியே இறைவன், இன்னும் கொஞ்சம் இன்னொரு வரம் கொடுத்தா தேவல, தினமும் ஊட்டுக்கு வேட்டி சட்டையெல்லாம் அனுப்பறேன்னு. பசி கெடையாது, குளிரும் கெடையாது, புழுக்கமும் கெடையாதுன்னு சொல்லிட்டாங்கன்னு வெச்சுக்கோங்க, மரம் மாதிரி இருப்பீங்க நீங்க. இந்த மானாவிமானம் சங்கடம் ஒண்ணுதான் புதுசா மொளச்சுரும். யாரும் வேட்டியும் கட்டிக்க வேண்டியதில்ல, சட்டையும் போட்டுக்க வேண்டுயதில்ல, குளிருதா புழுங்குதா, என்னா ஒண்ணு.. ஒண்ணுமேயில்ல பாருங்க. கல்லு மாதிரி இருந்துக்க வேண்டியதுதான். ஒலகத்துல சண்ட வம்பிருக்குமா? எடுக்கவோ, பிடிக்கவோ, பிடுங்கவோ, பறிக்கவோ இருக்குமா? ஆனா.., இருக்குதே. இயற்கை உட்பாதங்கள். இயற்கையினால் ஏற்படக்கூடிய வெப்ப தட்ப ஏற்ற இறக்கம், உடல் கழிவுப்பொருள் உந்து வேகம், பசி தாகம் முதலிய தொந்தரவுகள் இருக்குதே! இந்த தொந்தரவ ஏற்படுத்துனது யாரு? சீவராசிக்கு பசி, பசின்னு யாரு கொடுத்தா? அவங்க அம்மா கொடுத்தாங்களா? இறைவன்தான் கொடுத்தான். பசி தாகம் ஏற்படுத்தினான் அல்லவா, அதை தீர்த்து வைக்க அவனுக்கு தெரியாது? அதை தீர்த்து வைக்க அவனுக்கு முடியாது? தீர்த்துதான் வைக்கிறான். ஆனா அவன் வேகத்தில வைக்கிறான். கொஞ்சம் slow- ஆக இருக்கும்ன்னு வெச்சுக்கோங்களேன். நம்ம வசதி இல்லையேன்னா? இங்க பாருங்க எனக்கு ஒரு தலையணை இல்லிங்க.., ஏன் இப்ப தலையணை? தலையணை இருந்தாத்தானே தூங்கலாம். எப்ப தூங்கப் போற..? ராத்திரி 10 மணிக்கு. அப்ப.. கெடைக்கும் போ அப்படின்னுவான் இறைவன். எந்த நேரத்தில எது தேவையோ அந்த நேரத்தில நான் கொடுக்கிறேன் என்றால் எவ்வளவு சௌரியமா இருக்கும் நமக்கு. இப்ப தலையணைய நான் கக்கத்தில வெச்சுகிட்டே போனேன், வந்தேன்னாக்கா, எவ்வளவு கஷ்டமா இருக்கும், பஸ் ஏற்ரதுக்கு? நமக்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் நாமே வெச்சுருந்தா, பேஸ்ட் பிரஷ்ஷெல்லாம் பாக்கெட்ல வெச்சிருந்தா என்னமாயிருக்கும். எவ்வளவுதான் தூக்குறது? அது அத அங்கங்க வெச்சிட்டு அப்பப்போ எடுத்துக்கறோம் பாருங்க, இந்த வேலையைதான் இறைவன் பார்க்கிறான். உனக்கு எப்ப வேணுன்னாலும், என்ன வேணுன்னாலும் நான் தர்றேன். அடுத்த வருசம் மார்ச் மாசம் 31ம் தேதி எனக்கு சாப்பாடு வேணுமே.., இந்த கவலைய இப்ப பட்டுக்கவா? அத அன்னைக்குப் பட்டுக்கலாம். அடுத்த வருசம் வரட்டும், மார்ச் 30ம் தேதி வரட்டும். நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்ன்னு நினைக்கணும். இதே மாதிரி நீங்க நெனச்சுப் பாருங்க, அது வேணும் இது வேணும்னு நாம படுற கவலையெல்லாம் வேஸ்ட். அதது நெறைவேறிக்கிட்டுத்தான் இருக்கு. கொஞ்ச தாமதமாக நெறைவேறும். கொஞ்சம் கொறைவா நெறைவேறும். இறைவனுடைய இருப்பு அங்கேதான் தெரிகிறது. வேண்டியார்க்கு வேண்டியதெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கக் கூடியவன் இறைவன். இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பண்டங்களெல்லாம் இறைவனுடைய பண்டங்கள். அதெல்லாம் வெச்சுகிட்டு அவன் என்ன பண்ணப்போறான்? சொல்லுங்க.. நமக்கு கொடுக்காம அவன் வெச்சுகிட்டு என்ன பண்ணப்போறான்? என்ன இருக்குதுன்னு கேக்குறீங்களா அவங்கிட்ட? பஞ்சபூதந்தான் இருக்கு. வேற ஒண்ணுமே கெடையாது. உங்களுக்கு என்ன வேணும்ன்னாலும் இந்த பஞ்ச பூதங்களுக்குள்ளதான் அடக்கம். ஆகவே எல்லாவற்றையும் நமக்காகவே படைச்சு வெச்சிருக்கிறான். இந்த அதிசயத்தையும் பாருங்க. நமக்கு தேவையானதெல்லாம் இந்த பஞ்ச பூதங்கள். அது துணியா இருந்தாலும், சோறா இருந்தாலும். நாம இருக்கிறோம், நமக்கு சோறு, துணி தேவை. நாம முந்தியா? சோறு, துணியாகிய பஞ்ச பூதங்கள் முந்தியா? நம்மளெல்லாம் ஏற்பாடு பண்ணி வெச்சுக்கிட்டு.., நாமெல்லாம் ஐயோ ஐயோ பசி பசின்னு கத்தினவுடனே.. ஓகோ..! உங்களுக்கு பசிக்குதா? இருங்க வர்றேன். பஞ்ச பூதத்தை படைச்சு அனுப்பறேன்னா செஞ்சான்? பஞ்ச பூதத்தை படைச்சு வெச்சிட்டு, சீவனை ஏற்படுத்தி, அந்த சீவனுக்கு பசி ஏற்படுத்தறான். எவ்வளவு திட்டமிட்ட காரியம் பாருங்க. எல்லாரும் சாப்பிட வாங்க.. அப்படிங்கறாங்க அம்மா, எப்போ? அரிசி களஞ்சு போடும்போதா? சமைச்சு முடிச்சதுக்கப்புறம். இதுதான் இறைவனோட செயல்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்துவிடுகிறான். அதனால்தான் ஆங்கிலத்தில Provision என்று இறைவனுக்கு பேர். Provisionன்னா மளிகைக் கடைன்னு அர்த்தம். Provisional Store-ன்னு சொல்வாங்க. எல்லாம் அவங்கிட்ட இருக்கு. ஏற்பாடு பண்ணி வெச்சுட்டு பஞ்சபூதத்தை படைக்கிறான். அவன் Stock-ல வெச்சுகிட்டான். நமக்கு வேணும்ங்கறபோது தர்றான்.

அன்பர்களே! இந்த உணவு என்பது கிடைக்காத போது பெருங்குடல் சிறுகுடலைத் தின்னும். தாங்க முடியாத கஷ்டம். இறைவன் படைத்த உலகத்தில பசி தாகம், வெப்ப தட்ப ஏற்ற இறக்கம், போன்ற சின்னச்சின்னத் துன்பமா படைச்சு வெச்சிருக்கிறான். ஆனா இவற்றைத் தீர்ப்பதற்காக பண்டங்கள், சாமான்கள் சட்டுகளெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டான். அப்ப நிகரமா பார்த்தா துன்பமே இல்லை. ஆனா, துன்பம் இருக்குது. அதற்கான பண்டங்கள் பதார்த்தங்கள் இருக்கின்றன. அப்புறம் என்ன, எல்லாம் எடுத்து போட்டு அதைத் தீர்த்துக்க வேண்டியதுதான். நெஜமா நிகரமா பார்த்தா உலகத்தில துன்பமே இல்ல. இறைவன் படைத்த உலகத்தில் துன்பமே இல்ல. ஆனா பட்டினி போட்ட துன்பம் எப்படி வந்தது? பசி துன்பம் எப்படி வந்தது? மனிதர்கள் வாழத்தெரியாமல் வாழ்வதனால, அதிகமா சாப்பிடறதுனால துன்பம் வந்தது. அதாவது இறைவன் நம்ம வாழ்நாளெல்லாம் எத்தனை டன்னு அரிசி தின்பமோ அத்தனை டன் அரிசிதான் கொடுப்பான். நீங்க அத 60 வருசத்துல தின்னு தீர்த்துட்டா அப்பறம் பட்டினியா கெடக்க வேண்டியதுதான். அந்த பட்டினிக்கு பேர் அல்சர், Gas. ஏன் சாப்பிட முடியாமப் போவுது? இந்த வயசு  வரைக்கும் எவ்வளவு சாப்பிடலாமோ அத முன்னயே சாப்டாச்சு. Advance-ஆ சாப்டாச்சு. இந்த ஒரு கணக்கப் போட்டுப் பாருங்க. இந்த அரிசி மில்லுல அரிசியப் போட்டா மாவு கொட்டுது பாருங்க, flour mill. அதில அல்லர்ன்னு ஒண்ணு வெச்சிருப்பாங்க. அந்த அல்லருடைய capacity பத்து டன் அரைக்கும். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் அரைக்கலாம்? ஒரு எட்டு மணி நேரம் அரைக்கலாம். எட்டு மணி நேரம் அரைச்சீங்கன்னா அந்தப் பத்து டன் அரைக்கிறதுக்கு ஆறு மாசம் ஆகும். நீங்க 24 மணி நேரமும் அரைச்சீங்கன்னா பத்து டன்ன 2 மாசத்துல அரைச்சுப் போட்டரலாம். ரெண்டு மாசத்துக்கப்புறம் மெஷின் ஓடாது, நின்னு போயுரும். கத்தி தேய்ஞ்சு போகும். மெஷின் ஆட்டங்கண்டு போகும் அல்லவா? அந்த மாதிரி நாம நூறு வயசு சாப்பிட வேண்டியதயெல்லாம் முப்பது வயசு, நாப்பது வயசுலயே சாப்பிட்டா அந்த மெஷின் கெட்டு போயிரும். அதுக்கு மேல சாப்பிட முடியாது. இறைவனக் கேட்டா நான் மொதல்லயே கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்திட்டேன். நீ அதுங்காட்டியும் தின்னுட்டீன்னா நான் என்னப் பண்றது?ம்பார். இந்த மாதிரி பசி வந்தப்போ பசிக்கு ஈடாக சாப்பாட்டக் கொடுத்தா எந்த மாதிரி இருக்குது? அந்த பசி என்ற துன்பம் போயிடுதா? பசி என்ற துன்பம் போன இடத்தில உருவான ஒரு நிலையை என்னன்னு சொல்லலாம்? சாப்டுட்டு நல்ல நிறைவா இருக்கிறத Plusன்னு வெச்சுக்கோங்க. பசியா இருக்கிறதை minusன்னு வெச்சுக்கோங்க. சாப்டவுடனே ஒரு நிறைவு வருதே அதை No minusன்னு சொல்ல வேண்டியதுதானே? அத இவனா Plusன்னு நெனச்சுக்கறான். பசி போன இடத்தில Plusம் இல்ல, minusம் இல்ல. அது ஒரு திருப்தி நிலை. இந்த திருப்தி நிலைக்கு தவறா பேரு வெச்சுட்டான் இன்பம்ன்னு. துன்பம் போன இடத்தில உருவாகிய ஒரு நிலையை இன்பம்னு பேரு வெச்சி.., அந்த இன்பம் எப்படி வந்தது..? சாப்பிட்டவுடனே வந்தது. ஓ..! சாப்பிட்டா இன்பம் என்று அத இவன் சாப்பிட்டான். ஒருத்தரோ, ஒரு சில பேரோ, ஒரு நாட்டிலேயோ அதிகமாக சாப்பிட, சாப்பிட இன்னொருத்தருக்கு, இன்னொரு இடத்தில, இன்னொரு நாட்டுல அது கெடைக்காது. ஏன்னா உலகம் முழுவதும் உள்ள ஒரே உயிரினமாக நம்மள இறைவன் பாவித்து உலகம் முழுவதும் உள்ள சீவராசிகளுக்காகத்தான் பஞ்ச பூதத்தை படைச்சி வெச்சிருக்கான். இந்தியாவுக்கு இவ்வளவு ஷேர் பண்ணி கொடுக்கிறது. பாகிஸ்தானுக்கு கொடுக்கிறது என்றெல்லாம் அவனோட வேலையில்லை. நிரவிக்கொள்ள வேண்டியது மனித சாதியினுடைய வேலை. இருக்கிற எடத்தில வாழணும். இல்லாத எடத்தில வாழக்கூடாது. மிருகங்களெல்லாம் பாருங்க எங்க சாப்பாடு கெடைக்குதோ அது அங்குதான் வாழும். கெடைக்காத எடத்துல வாழாது.

அன்பர்களே! பசி துன்பத்தை நீக்கணும். பசி துன்பத்தை நீக்கினால் யார் சந்தோஷப்படுவா? இறைவன் சந்தோஷப்படுவான். பசி அடங்கி.., சாப்பிட்டவரு சந்தோஷப்படுவாரு. அவரிடத்தில் இறைவன் இருக்காரு இல்லையா? அப்ப இறைவனும் சந்தோஷப்படுவான். அப்ப இறைவனுக்கு சாப்பாடு போட்டா  தேவலைன்னு ஒரு கணக்கு வந்தது. இறைவனுக்கு சாப்பாடு போடலைன்னா வாடிப்போவான், யார் வாடிப்போவான்? இறைவன் வாடிப்போவான். உலகத்தில மனிதர்கள் துன்புறக்கூடாது. பசி என்ற ஒரு நிலைமை இருக்கக்கூடாது. ஆகவே பசித்துன்பத்தை நீக்குவதற்கு ஏற்பாடு பண்ணணும் என்று வள்ளலார் பாடுபட்டார். இன்னைக்கும் அவர் பேரால வடலூர்ல அது நடந்துகொண்டிருக்கிறது. யார் போனாலும் சாப்பிடலாம். அவங்க பாட்டுக்கு சமைச்சுட்டே இருப்பாங்க. மதிய சாப்பாடு 20 பேர், 30 பேர் இருந்தாலும் போட்டுகிட்டே இருப்பாங்கன்னு வெச்சுக்கோங்க.

அன்பர்களே! கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான். புரியுதா? கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான்கிறாரு. கடைசியில அம்மா, தாயே ரெண்டு சோறு போடுங்கன்னு வந்து நிற்கும்படி ஆயிடுச்சே! என்னதான் ஞானியாக இருந்தாலும் சாப்பாடு இல்லைனா வாடிப்போவான். யாரு வாடிப்போவான்? ஞானி, இறைவன் வாடிப்போவான். அப்ப இறைவனை சாப்பாட்டு ராமன்னு சொல்லலாமா? சரியான சாப்பாட்டு ராமன், சாப்பாடு இல்லைனா ஒண்ணும் நடக்காது. அப்ப நாம சாப்பிடறோமே எதுக்காக சாப்பிடறோம்? ஐயோ பாவம் இறைவன் பசியால் துடிப்பானே, அதுக்காக சாப்படறோம். எனக்கு பசிச்சு நான் வாடறேன்னா என்னிடத்திலே இருக்கக்கூடிய இறைவனும்தானே வாடுவான். ம்ஹூம்.. இறைவா இறைவா நீ வாடாதே நான் சாப்படறேன், நீ ஏப்பம் விடு என்று சொல்லி இறைவனுக்காகச் சாப்பிடறோம். துன்பம் என்பது பிரபஞ்சத்தில எங்கேயும் இருக்கக்கூடாது. பசித்தால் அது துன்பம். அந்த பசி என்ற துன்பம் பிரபஞ்சத்தில் இருந்தால் அதை நீக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்தத் துன்பத்தை நீக்குவதற்காக என்ன பண்ணுவது? நான்தான் சாப்பிட்டாகணும். ஒவ்வொரு சாப்பாடும் தேவபூசை. ஒவ்வொரு பிச்சையும் தேவபூசை. பிறருக்கு இடக்கூடிய சாப்பாடு, அவர்கள் பசித்துன்பத்தைப் போக்குகிறது. இறைவன் சந்தோஷப்படுவான். எனக்கே பசி என்ற துன்பம் வந்தால் நான் ஒழுங்கா மரியாதையா சாப்பிடணும். அப்புறம் சாப்பிடறேன்னு சொல்லக் கூடாது. ரொம்ப பசிக்கும், யாருக்கு? ம்... இந்த கணக்கைப் போட்டுப் பாருங்க. நாளையிலிருந்து ஒழுங்கா சாப்பிடுவோம். நல்லபடியா சாப்பிடுவோம். இறைவன் சந்தோஷமா இருப்பான். என்னதான் இறைவனா இருந்தாலும் சாப்பாடு இல்லைனா நடக்காது. திருமூலர் சொல்றாரு,

உன்னும் அளவில் உணரும் ஒருவனை

பன்னு மறைகள் பயிலும் பரமனை

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே!

அன்னம்னா சோறு. யாரு..? இறைவன் அன்னமயம். எப்படிப்பட்ட இறைவன்? உன்னும் அளவில் உணரும் ஒருவன் – ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா என்னிடத்திலேயும் இருக்கிறான்னு தெரியக்கூடிய ஒருவன். பன்னு மறைகள் பயிலும் பரமன் – வேதங்களெல்லாம் அவனை படிச்சுப் பாக்குதாம். படிச்சு முடிக்க முடியலையாம். அப்படிப்பட்ட விஸ்தாரமானவன். என்னுள் இருக்கும் இளையா விளக்கு - அறிவுமயமாக என்னிடத்தில இருக்கக் கூடியவன். இந்த மாதிரி மூன்று வல்லமைகள் பொருந்தியிருந்தாலும் சாப்பாடு இல்லைனா வாடிப்போவானே! அன்னமயம் என்று அறிந்துகொண்டேனே! அதனால நான் சாப்பிடுகிறேன். அதனால

பசித்துன்பத்தை நான் ஏற்படுத்தக் கூடாது. யார் சாப்பாட்டையும் திருடிக்ககூடாது. சாப்பாடு திருடுறவங்க யாருன்னு கேக்குறீங்களா? காசு திருடினாலும் சாப்பாட்ட திருடறதாத்தான் அர்த்தம். எதை திருடினாலும் அவர்களுடைய பண்டம், முக்கியமா சாப்பாட்டுக்குத்தான் வெச்சிருக்காங்க. அது தங்க நகையா இருந்தாலும் சரி, கரன்சி நோட்டா இருந்தாலும் சரி. சாப்பாடு என்பது வெறும் சோத்துல மட்டுமில்ல. வெவ்வேறு விதமான அனுபவங்களிலேயும் இருக்கிறது. ஆகவே யாருடைய சாப்பாட்டுக்கும் நான் கெடுதலாக இருக்க மாட்டேன். யாருக்கு சாப்பாடு வேண்டுமானாலும், எந்த அனுபவம் வேண்டுமானாலும் என்னால முடிந்தவரை பிறருக்கு உதவுவேன். நானும் பசி பட்டினியாக இருக்க மாட்டேன். நான் பட்டினி கிடந்து என் உடலை வருத்திக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் என்னிடத்தில் இருக்கக்கூடிய இறைவன் வாடிப்போவான் என்று நடைமுறையாகவும் சித்தாந்த ரீதியாகவும் பெரியவர்கள் விளக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்து, நாம் தெரிந்துகொண்டு, எங்கும், யாருக்கும், தனக்கோ, பிறருக்கோ துன்பம் வராத, எழாத அளவோடும், முறையோடும் வாழ்கின்ற ஒரு ஒழுக்கத்தை பெறுவோமாக! என்று கூறி நிறைவு செய்யலாம்.

- நினைவில் உங்களோடு kgs.

_

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 8

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக…

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து…

KG Sami

தவம் - 35

வான் காந்தம் வரவு இயற்கையாக வருவதைவிட விளக்கிலும், கண்ணாடியிலும் வருவது அதிகம். இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் நீங்கள் பயிற்சி…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது,…

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள்.…